×

வங்கியில் லோன் கேட்டு சென்றால் ஆடு, மாடுகளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்குறாங்க… நிர்மலா சீதாராமனிடம் பாதிக்கப்பட்டவர் குமுறும் வீடியோ வைரல்

ஸ்ரீவைகுண்டம்: வங்கியில் லோன் கேட்டு சென்றால் ஆடு, மாடுகளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்பதாக நிர்மலா சீதாராமனிடம் பாதிக்கப்பட்டவர் குமுறும் வீடியோ வைரலாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பக்தர்கள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். குறிப்பாக கோயிலுக்கு பின் பகுதியில் சுவாமி வீதியுலா வரும் இடம் கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோயில் வளாகத்தில் இருந்த பழமையான மாமரம் முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த கோயில் செயல் அலுவலர் கோபால மணிகண்டன், அப்பகுதியில் வேலி அமைத்துக் கொடுப்பதாக தெரிவித்தார்.

அப்போது ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘செயல் அலுவலர் அப்பிரச்னையை சரி செய்துள்ளாரா? என்பதை 10 நாட்களில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பார்வையிடுவார். அதன் பிறகும் பணி நடைபெறவில்லை எனில் நானே அங்கு வந்து அது சரி செய்யப்படும் வரை அங்கிருந்து நகர மாட்டேன்,’ என்றார். இதற்கு அறநிலையத்துறை இணை ஆணையர் நிச்சயம் அந்த பணிகளை செய்து முடிப்போம், என்றார். உடனடியாக குறுக்கிட்ட ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பதில் கூறியவர் யார் எனக் கேட்கவே, அறநிலையத்துறை இணை ஆணையர் என தெரிவித்தனர். அந்த பதவி எல்லாம் உள்ளதா? என்றும் அவர் கேட்டார்.

இதுதொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், கோயில் செயல் அலுவலர், பக்தர்கள் இடையே நடந்த உரையாடல் வருமாறு:
நிர்மலா சீதாராமன்: எல்லாத்துக்கும் காதுல விழுற மாதிரி சொல்லணும்.
பக்தர்: மேடம், அந்த வழியாக தான் பெருமாள் பிரமோற்சவத்திற்கு வருவாரு…
நிர்மலா சீதாராமன்: அங்க தான் டாய்லட் இருக்கா…இங்க பாருங்கோ, அவர் சொன்னது காதில் விழுந்ததா? என்ன சொன்னாரு
அதிகாரி: அவர் சொன்னது சம்பளத்துக்காக சொன்னாரு…
பக்தர்: பிரமோற்சவத்தில் பெருமாள் பின்னாடி வரும் போது…. அந்த இடத்தில் வரும் போது
நிர்மலா சீதாராமன்: அவர் சொன்னது புரியுதா, நாகரிகமா சொல்றாரு. பெருமாள் ஊர்வலமாக வரும் போது அந்த வழியாக வர்றாரு..
உடனே அறநிலையத்துறை அதிகாரி, அதை சுத்தப்படுத்தி விடுவோம். கம்ப்ளீட்டா பென்ஸ் போட்டு விடுவோம் என்கிறார்.
நிர்மலா சீதாராமன்: பப்ளிக் டாய்லட்டாக இருக்கும் அந்த ரோட்டை, தெருவை சுத்தப்படுத்தி கொடுங்கனு கேட்கிறார்.
அறநிலையத்துறை இணை ஆணையர்: கம்ப்ளீட்டா சுத்தப்படுத்தி கொடுத்துருவோம்.
நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ இடைமறித்து: அதை இடித்து விட்டு மாற்ற வேண்டுமா….அதற்கு எவ்வளவு செலவாகும்?
நிர்மலா சீதாராமன்: நயினார் நாகேந்திரனை பார்த்து, நீங்கள் ஏன் அதைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்? கோயிலில் இவர்களுக்கு 3 ஆயிரம் கொடுப்பதற்கே…ரேஷன் கடைகளில் கொடுப்பது மாதிரி அளந்து, பார்த்து கொடுக்கிறவங்க…இங்க சம்பளம் கொடுக்க முடியாது, ஏனா அதுக்கு ஒரு காரணம் இருக்கு. அந்த மாதிரி தெருவை ரிப்பேர் பண்றது அவங்களுக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல.. நீங்க அதைப் பற்றி யோசிக்காதீங்க,
நயினார் நாகேந்திரன்: அதை மறந்துருவோம்.
நிர்மலா சீதாராமன்: நீங்க ஏன்ன… ரொம்ப பெருமையா சிஎஸ்ஆர் ஏற்பாடு பன்றேன்னு சொல்றீங்க, நோ வே, என்றார். அப்போது குறுக்கிட்ட ஒரு பக்தர் தான் ரூ.1000 நன்கொடை தருவதாக கூற, இருப்பா தம்பி, நீ உண்டியல்ல போடாத, எப்படி கொடுக்கணுமோ, அப்படி கொடுத்துக்க என்றார். பின்னர் அதிகாரியை பார்த்து, ரொம்ப கிண்டலும், கேலியுமா பேசுறேன்னு நினைக்காதீங்க… உங்கள வேற எதுவும் பேசலை, பெருமாள் ஊர்வலம் வரும் பாதையை சரி செய்து கொடுங்கனு கேட்கிறேன். இவங்களும் அதை தான் சொல்கிறார்கள். எப்படி பண்ண முடியுமோ. அப்படி…இத்துடன் உரையாடல் முடிகிறது. இதற்கிடையே, நிர்மலா சீதாராமனிடம் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மழை வெள்ளத்தால் உயிரிழந்த கால்நடைகளால் ஏற்பட்ட இழப்புக்கு லோன் கேட்டு வங்கி சென்றால் ஆடு, மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்களிடம் இறப்பு சான்றிதழ் வாங்கி வர சொல்கிறார்கள். நாங்கள் யாரை போய் கேட்பது என்று வேதனை தெரிவித்தனர். இதை கேட்ட நிர்மலா சீதாராமன், நான் சொல்கிறேன் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.

The post வங்கியில் லோன் கேட்டு சென்றால் ஆடு, மாடுகளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்குறாங்க… நிர்மலா சீதாராமனிடம் பாதிக்கப்பட்டவர் குமுறும் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Srivaikundam ,
× RELATED ‘ஒன்னுமே செய்யாம லாபம் அள்ளுறீங்களே...